சோளிங்கரில் கணவர் ரூ.30 லட்சம் கடன் வாங்கியதால் கோவில் பெண் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் முருகாரெட்டி தெருவைச் சேர்ந்த பிரகாஷ். கட்டிட கான்டிராக்டர். இவருடைய மனைவி சுயாதேவி (வயது 38). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மாணவி சுயா தேவி திருத்தணி முருகன் கோவிலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். 

கோரோனா காலத்தில் கட்டிட வேலை சரியாக நடக்காததால் பிரகாஷ் ரூ.30 லட்சம் வரை கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டு மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று காலை சுயாதேவி தூக்குப் போட்டுக்கொண்டார். அவரை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் சுயாதேவி வழியிலேயே இறந்துவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து சோளிங்கர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.