தமிழகத்தில் கள்ளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி, ராணிப்பேட்டைமாவட்டம், பொன்னம்பலத்தில் இன்று கள்இறக்கும் போராட்டம் நடக்கிறது. இதன்தொடர்ச்சியாக கள் இறக்குவதற்கு அனுமதிகோரி மார்ச் 13-ம் தேதி ஈரோட்டில்கள் விடுதலை மாநாடு நடக்கிறது.
தமிழகத்தில் கள் இறக்குதல் மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நலனுக்காக, கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்கம் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக, தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. கள் இறக்குவதும், பருகுவதும் இந்தியஅரசியல் அமைப்புச் சட்டம் மக்களுக்குக் கொடுத்திருக்கும் உணவு தேடும்உரிமை என்று கூறும் இந்த அமைப்பினர், கள் ஒரு தடைசெய்யப்பட வேண்டிய போதைப்பொருள் என நிரூபிப்பவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு வழங்குவதாகவும் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த கோரிக்கையை வலியுறுத்தி, ராணிப்பேட்டை மாவட்டம் பொன்னம்பலத்தில், இன்று (27-ம் தேதி) காலை 10 மணிக்கு கள் இறக்கும் போராட்டமும், மார்ச் 13-ம் தேதி ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள பரிமளம் மஹால் மற்றும் குருசாமிக் கவுண்டர் மண்டபத்தில், கள் விடுதலை மாநாடும் நடக்கவுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு கள் இயக்ககள ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 33 ஆண்டுகளாக மதுப் பட்டியலில் சேராத கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், டாஸ்மாக் மூலம் மதுபானங்களை அரசு விற்பனை செய்து வருகிறது. தமிழகத்தில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை குறையவும், மருந்துக் கடைகள், மருத்துவமனைகள் அதிகரிக்கவும் டாஸ்மாக் மது விற்பனையே காரணம்.

எனவே, உயிர்கொல்லியாக விளங்கும் மது விற்பனையை அரசு கைவிட்டு,உணவுப் பொருளான கள்ளினை இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும். கள்ளினை மதிப்புக் கூட்டத்தக்க பொருளாக மாற்றி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால், அந்நியச் செலாவணியும் கிடைக்கும்.

திராவிடர் கழகத் தலைவர் பெரியார்கள் ஆதரவாளர். 1963-ல் கும்பகோணத்தில் நடந்த கூட்டத்தில், ‘கள்ளுக்கு தடையும், கடையும் கூடாது, கள் ஒரு உணவு, மரத்தில் இருந்து இறக்கிய கள்ளை மரத்தடியிலேயே குடிக்க விட்டுவிட்டால், எந்த பாதிப்பும் வராது’ என்று தெரிவித்துள்ளார். எனவே, பெரியாரின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் திராவிடர் கழகத்தினர் எங்களது போராட்டத்திலும், ஈரோடு கள் விடுதலை மாநாட்டிலும் பங்கேற்க வேண்டும், என்றார்.