குடியாத்தம் அருகே ஒற்றை யானை தொடர் அட்டகாசம் செய்து வருவதால் கிராமமக்கள் பீதியடைந்துள்ளனர்.
தமிழகம்- ஆந்திரா கர்நாடகா எல்லையை ஒட்டிய பகுதியில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனப்பகுதியையொட்டி உள்ள ஆந்திர வனப்பகுதியில் யானைகள் சரணாலயம் உள்ளது . இங்குள்ள யானைகள் அடிக்கடி சரணாலயத்தை விட்டு வெளியேறி குடியாத்தம் வனப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
கடந்தசில நாட்களாக ஒற்றை யானை குடியாத்தம் அடுத்த கதிர்குளம் , கொட்டமிட்டப்பள்ளி , மோர்தானா ஆகிய கிராமங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இந்த யானையை வனத்துறையினர் , வனப்பகுதிக்குள் விரட்டியடித்து வருகின்றனர்.
இருப்பினும் ஒற்றை யானை மீண்டும் மீண்டும் ஊருக்குள் நுழைய முயற்சி செய்து வருகிறது . அதேபோல் , நேற்று அதிகாலை ஒற்றை யானை குடியாத்தம் அடுத்த சைனகொண்டா கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் , குடியாத்தம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்கள் உதவியுடன் பட்டாசுவெடித்தும் , மேளம் அடித்தும் யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இருப்பினும் இந்த யானை மீண்டும் ஊருக்குள் வந்து விடுமோ என கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.
எனவே , காட்டு யானைகள் கிராம பகுதிக்குள் நுழையாமல் இருக்க வனத்துறையினர் நிரந்தர தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .