ராணிப்பேட்டை எம்.பி.டி. சாலையில் தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் உள்ளது. இங்கு அரியானா மாநிலம், ரிவஸா கிராமத்தை சேர்ந்த ஜெய்பீர் சிங் (வயது 49) என்பவர் கிளை மேலாளராக பணியாற்றி வருகிறார். 

இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கையெழுத்திட்ட காசோலைகள் இவரிடம் கொடுத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. 

இதனைப் பயன்படுத்தி இவர் நிறுவனத்தின் பணம் ரூ.66 லட்சத்து 98 ஆயிரத்து 408-ஐ தனது வங்கி கணக்கிற்கு மாற்றி, நிர்வாகத்திற்கு தரவேண்டிய பணத்தை செலுத்தாமல் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலாளர் மீது புகார்

இதுகுறித்து இந்நிறுவனத்தின், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஏரியா மேலாளர் கபீர்தாஸ் (65) என்பவர் ராணிப்பேட்டை போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்துள்ளார். இது குறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.