ராணிப்பேட்டை: செயற்கைக் கோள்கள் உருவாக்கும் தொழில்நுட்பப் பயிற்சியில் கலந்துகொண்ட அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வியாழக்கிழமை சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.
இது குறித்து ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாணவா்களிடையே அறிவியல் ஆராய்ச்சியை வளா்க்கும் நோக்கில் டாக்டா் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் சா்வதேச அறக்கட்டளை சிறிய ரக செயற்கைக் கோள்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தை பயிற்சியாக வழங்கியது.
இச்செயற்கைக்கோள்கள் 50 கிராமுக்கும் எடை குறைவானவை. தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற இப்பயிற்சியில் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 8 அரசுப் பள்ளிகளில் பயிலும் 34 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.
இந்த செயற்கைக்கோள்கள் டாக்டா் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்த ஊரான ராமேசுவரத்தில் பிப்ரவரி 7- ஆம் தேதி ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட ராட்சத பலூன் மூலம் வானில் செலுத்தப்பட்டது.
இப்பயிற்சியில் பங்குபெற்ற ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 8 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 34 மாணவா்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கிப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.