வேலூர்: சட்டசபை தேர்தலில் ஊர்க்காவல் படையினர் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று டி.ஐ.ஜி. காமினி தெரிவித்துள்ளார்.
வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் ஊர்க்காவல் படை வீரர்கள் பயிற்சி நிறைவு விழா நேற்று நடைபெற்றது. ஊர்க்காவல் படை சரக தளபதி வி.என்.டி.சுரேஷ் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் முன்னிலை வகித்தார். ஊர்க்காவல் படை மண்டல தளபதி குமரன் வரவேற்றார்

சிறப்பு விருந்தினராக வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி கலந்து கொண்டு பேசியதாவது, சீருடை அணிவது நமக்குக் கிடைத்த பரிசு. இந்தப்பணியில் சேர பலர் போட்டி போட்டனர். ஆனால் நீங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள். இந்தத் துறை கட்டுப்பாடு நிறைந்தது. நீங்கள் காவல் துறையுடன் இணைந்து பணியாற்றுவீர்கள்.

நீங்கள் ஏதாவது தவறு செய்தால் ஒட்டுமொத்த காவல்துறையையும் குறை கூறுவார்கள். எனவே மிகவும் கவனத்துடன் பணியாற்ற வேண்டும். காவல்துறைக்கு உங்களுடைய ஒத்துழைப்பு முக்கியமானதாகும். கொரோனா காலத்திலும் மிகச் சிறப்பாகப் பணியாற்றினீர்கள். குறிப்பாகப் பெண் ஊர்க்காவல் படையினரை பாராட்ட வேண்டும்.

உங்களுக்குப் பல வாய்ப்புகள் கிடைத்தாலும் அதைவிட முக்கிய பணியாகப் பொதுமக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அவர்களைப் பாதுகாப்பது உங்களது கடமையாகும். இதை மட்டும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். வருகிற சட்டசபை தேர்தலில் 100 சதவீதம் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக 45 நாட்கள் பயிற்சி முடித்த 31 ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை டி.ஐ.ஜி.காமினி, போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் ஆகியோர் ஏற்றுக்கொண்டனர். சிறப்பாகப் பயிற்சி முடித்த முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது.