அரக்கோணத்தில் பாழடைந்து , இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டடத்தில் தலைமை அஞ்சலகம்  இயங்கி வருவதால் அக்கட்டடத்தின் உள்ளே செல்ல பொதுமக்கள் தயங்கும் நிலை காணப்படுகிற. 
அரக்கோணம் அஞ்சல் கோட்டத்தில் இரு தலைமை அஞ்சலகங்கள் உள்ளன . ஒன்று அரக்கோணத்திலும் , மற்றொன்று ராணிப்பேட்டையிலும் இயங்கி வருகின்றன . அரக்கோணம் தலைமை அஞ்சலகத்துக்கு கடந்த 1980 - ஆம் ஆண்டில் புதிய கட்டடம் சொந்தமாக கட்டப்பட்டு அதில் அலுவலகம் இயங்கி வந்தது . அக்கட்டடத்தின் மாடியில் கோட்டக் கண்காணிப்பாளர் அலுவலகம் இயங்கி வந்தது . 

இந்நிலையில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் இக்கட்டடத்தின் முதல் மாடியின் மேற்கூரைகள் இடிந்து விழத் தொடங்கின . இதனால் அக்கட்டடத்தில் பணியாற்ற அலுவலர்கள் மறுத்ததால் , அலுவலகம் தரைதளத்தில் அஞ்சலக அலுவலகப் பகுதியிலேயே இயங்கி வந்தது . அண்மையில் தரைத் தளத்திலும் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு அவை எப்போது விழுமோ என்ற நிலை உருவானது . மேலும் தரைத்தளத்திலும் மேற்கூரைகள் இடிந்து விழத்தொடங்கின . இதையடுத்து அண்மையில் கோட்டக் கண்காணிப்பாளர் அலுவலகம் தனியார் கட்டடத்துக்கு மாற்றப்பட்டு விட்டது . 

இந்த கட்டடத்தில் தலைமை அஞ்சலகம் மட்டுமே இயங்கி வருகிறது . இதில் பணியாற்றும் அலுவலர்களும் தங்களால் இந்த கட்டடத்தில் பணியாற்ற இயலாது எனக்கூறி கட்டடத்தை மாற்றக்கோரி இருமுறை ஆர்ப்பாட்டம் நடத்தினர் . அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் சிலர் மீதும் கட்டட மேற்கூரைகள் சில சமயங்களில் விழுந்தன . மழைக்காலத்தில் அலுவலகத்தின் உள்ளேயே தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் உள்ளே வர முடியாத நிலை உள்ளது . 

அரக்கோணத்தில் பல மத்திய அரசு அலுவலகங்களுக்கு சொந்த இடம் இல்லாமல் தனியார் இடத்தில் இயங்கி வருகின்றன . இந்நிலையில் அஞ்சல் அலுவலகத்திற்கு நகரின் மிகவும் மையமான பகுதியில் இடம் சொந்தமாக இருக்கும்போது அங்கு புதிய கட்டடத்தை கட்டலாம் என்று பொது மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர் . 

இது குறித்து அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சிவசங்கரனிடம் கேட்டபோது அவர் கூறியது : கட்டட தன்மையைக் கருத்தில் கொண்டு அங்கு இயங்கி வந்த கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தை அண்மையில் தனியார் கட்டடத்துக்கு மாற்றியுள்ளோம் . 

தலைமை அஞ்சலக அலுவலகத்தையும் தனியார் கட்டடத்துக்கு இடம் மாற்றும் பணி நடந்து வருகிறது . இரண்டு வாரங்களில் தலைமை அஞ்சலகக் கட்டடம் தனியார் கட்டடத்துக்கு மாற்றப்பட்டு விடும் . தற்போதுள்ள பழைய கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டலாமா அல்லது அக்கட்டடத்தை செப்பனிடமுடியுமா என ஆய்வு நடத்த அஞ்சல் துறைத் தலைமை அலுவலகத்தின் மூலம் குழு அமைக்கப்பட்டுள்ளது . அக்குழுவினர் கட்டடத்தைப் பார்வையிட விரைவில் வர உள்ளனர் . அதன் பிறகு புதிய கட்டடத்தை அங்கே கட்டுவது குறித்து அஞ்சல்துறைத் தலைமையகம் முடிவு செய்யும் என்றார் அவர் . . ↑