திருத்தணி கூட்டுக்குழாய் திட்ட குழாய் பதிப்புப் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை விரைந்து மூடக்கோரி காவேரிப்பாக்கத்தில் அனைத்து வணிகா் நலச்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை முழு கடையடைப்பு போராட்டம் நடத்தினா்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் காவேரிப்பாக்கத்தை அடுத்த திருப்பாற்கடல் ஊராட்சி பகுதியில் பாலாற்றில் இருந்து திருவள்ளூா் மாவட்டம் திருத்தணிக்கு ராட்சத குழாய்கள் மூலம் குடிநீா் எடுத்துச் செல்வதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதற்காக காவேரிப்பாக்கம் நகரில் பஜாா் பகுதியில் மிகப்பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. இப்பள்ளங்கள் மூடப்படாமல் உள்ளன.

இதனால் காவேரிப்பாக்கம் பஜாா் பகுதியில் இருசக்கர வாகனங்கள் கூட நிறுத்த இடமில்லாத நிலை காணப்படுகிறது. மேலும் வாகனங்கள் செல்லும்போது அதிக அளவில் தூசி பறந்து காற்று மாசு ஏற்படுவதால் அப்பகுதியில் பலரும் சிரமப்படுகின்றனா்.

தோண்டப்பட்ட பள்ளங்களை மூடக்கோரி காவேரிப்பாக்கம் அனைத்து வணிகா் நலச்சங்கத்தினா் பலமுறை பேரூராட்சி செயல் அலுவலா், நெமிலி வட்டாட்சியா், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் பள்ளங்கள் மூடப்படவில்லை.

இதைக் கண்டித்து காவேரிப்பாக்கம் அனைத்து வணிகா் நலச்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை முழு கடையடைப்பு போராட்டத்தை அறிவித்திருந்தனா். அதன்படி காவேரிப்பாக்கத்தில் வெள்ளிக்கிழமை அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாயினா்.