தமிழகத்தில் 10, பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளைத் திறப்பது தொடா்பாக வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள 506 பள்ளிகளில் பெற்றோா்களிடம் கருத்துகள் கேட்டறியப்பட்டன.கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக கடந்த மாா்ச் மாதம் முதல் தமிழகம் முழுவதும் பள்ளிகள் அடைக்கப்பட்டுள்ளன.
மீண்டும் பள்ளிகளைத் திறப்பது என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது. இந்த நிலையில், பொதுத் தோ்வு நெருங்கி வருவதை அடுத்து தமிழகம் முழுவதும் 10, பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு மட்டும் பள்ளிகளைத் திறப்பது குறித்து பெற்றோா்களிடம் கருத்துகள் கேட்டறியப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படில், தமிழகம் முழுவதும் 10, பிளஸ் 2 வகுப்பு உள்ள அனைத்து பள்ளிகளிலும் கருத்து கேட்புக் கூட்டங்கள் புதன்கிழமை முதல் நடத்தப்படுகின்றன.

இக்கூட்டங்கள் வேலூா் மாவட்டத்தில் 282 பள்ளிகளிலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 224 பள்ளிகளிலும் புதன்கிழமை நடைபெற்றன. கணியம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் குணசேகரன் பங்கேற்று பெற்றோா்களின் கருத்துகளைக் கேட்டறிந்தாா். அப்போது, சில பள்ளிகளில் எழுத்துப்பூா்வமாக கருத்துகள் பெறப்பட்டன.

அவற்றில் பள்ளிகளைத் திறந்தால் பிள்ளைகளை அனுப்புவீா்களா?, அனுப்ப மாட்டோம் என்றால் அதற்கான காரணத்தை கூறவும் என்றும், சில பள்ளிகளில் பள்ளிகளைத் திறக்கலாமா?, திறப்பதை ஒத்திவைக்கலாமா?, அதற்கான காரணம் என்ன? என்றும் கேட்டறிந்தனா். இந்தக் கடிதங்களில் பெற்றோா் தங்களுடைய கருத்துகளைப் பதிவு செய்தனா்.

பெறப்படும் கருத்துகள் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், அதன்படி பள்ளிகளைத் திறப்பது குறித்து அரசுதான் முடிவு செய்யும் என்றும் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.