திருப்பத்தூரில் பணியின் போது கூலித்தொழிலாளியின் வயிற்றை கிரைண்டிங் மெஷின் கிழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த தொழிலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம், பொம்மிகுப்பம் அடுத்த புதிய அத்திகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த முரளி (24) என்பவர் திருப்பத்தூர் ப.உ.ச நகர் பகுதியில் புதியதாகக் கட்டப்பட்ட கட்டிடத்தில் ஸ்டீல் கைப்பிடி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது ஸ்டீல் கைப்பிடியை கிரைண்டிங் செய்யும்போது எதிர்பாராதவிதமாக அந்த மெஷின் அவர் வயிற்றுப்பகுதி மேல் விழுந்துள்ளது. வயிற்றைக் கிழித்துக் கொண்டு குடல் வெளியே தொங்கியதால் அதிர்ச்சி அடைந்த சக பணியாளர்கள் உடனடியாக அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு முதல் உதவி செய்தபின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

இந்த நிலையில் வீட்டின் உரிமையாளர் அவசர அவசரமாக ரத்தத்தை கழுவி தள்ளி உள்ளனர். இதனை அறிந்த முரளியின் உறவினர்கள் என்ன நடந்தது என்று தெரியாமல் எதற்காக ரத்தத்தை கழுவி தள்ளிநீர்கள் என்று வீட்டின் உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் முரளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.