வேலூர்: இந்தியாவிலேயே முதல் முறையாக காளைக்கு பிளேட் வைத்து வேலூர் அரசு கால்நடை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். 

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே உள்ள காவலூர் பகுதியில் அண்ணாமலை என்பவர் சொந்தமான "செண்பகதோப்பு டான்" என்கிற காங்கேயம் வகையை சேர்ந்த காளை ஒன்றை வளர்ந்து வருகிறார்‌‌. கடந்து ஆண்டு மட்டும் 6 கிராமங்களில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்று முதல் பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது. 

இவர் (ஜன.14) அணைகட்டில் நடைபெற்ற எருதுவிடும் விழாவிற்கு தனது காளையை அழைத்துச் சென்றுள்ளார். அப்போது பந்தயத்திற்கு முன்பாக அணைக்கட்டில் சாலையில் சென்று கொண்டிருந்த காளையை மினி லாரி ஒன்று மோதியது. அதில் பலத்த காயம் அடைந்த காளையின் இடது பக்கம் பகுதியில் உள்ள இரண்டு விலா எழும்பு முறிந்து, வயிற்றுப் பகுதி கிழிந்து குடல் மற்றும் அசையூண் இரைப்பை(Rumen) வெளியே சரிந்தது. மேலும் அதிகமான இரத்த போக்கு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து காளைக்கு சிகிச்சை அளிக்க வேலூர் டவுன் ரயில் நிலையம் அருகே உள்ள வேலூர் அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு கால்நடை உதவி மருத்துவர்கள் ரவி ஷங்கர், அரேஷ், பிரதம மருத்துவர் ஜோசப் ராஜ் மற்றும் கால்நடை இணை இயக்குநர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் காயத்தை ஆய்வு செய்து முதலுதவி அளித்தனர். 

பின்னர் காளைக்கு அவசர அறுவை சிகிச்சை மேற்கொண்டனர், காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை ஏழு மணி நேரம் நீடித்த இந்த அறுவை சிகிச்சையில் காளைக்கு மயக்க மருத்து அளிக்கப்பட்டு விலா எழும்பு பிளேட் வைத்து இணைக்கப்பட்டது, மேலும் வெளியே சரிந்த குடல் மற்றும் அசையூண் இரைப்பை பகுதியை மீண்டும் வயிற்றுப் பகுதியில் முறையாக வைத்து தைத்தனர்‌. அறுவை சிகிச்சை முடிந்து காளை உடல் ஆரோக்கியத்துடன் நன்றாக உள்ளது.

மேலும் இது குறித்து கால்நடை மருத்துவர்கள் கூறுகையில். இந்தியாவிலேயே முதல் முறையாக இந்த அறுவை சிகிச்சையை வேலூர் அரசு கால்நடை மருத்துவர்கள் செய்து சாதித்துள்ளனர். காளைக்கு தொடர்ந்து 5 நாள் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும், காளையை ஓய்வில் வைத்திருக்கும் படியும், உணவு பாதி வயிறு அளவில் அளிக்கும்படியும் மாட்டு உரிமையாளருக்கு அறிவுறுத்தி உள்ளோம்.

இந்த காளை முழுமையாக நலம் பெற ஒரு மாத காலம் ஆகும். எழும்பு இணைந்த பிறகு அதன் உடம்பில் உள்ள பிளேட்டை விரும்பினால் அகற்றிக்கொள்ளலாம். உடல்நலம் நன்று தேரிய பிறகு மீண்டும் பந்தையத்தில் இந்த காளை பங்கேற்கலாம் என தெரிவித்தனர்.