சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா தற்போது உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது சிகிச்சையில் சந்தேகம் இருப்பதாகவும், இவரது உயிருக்கு ஆபத்து என்றும் பலரும் தற்போது குற்றம்சாட்டி வருகின்றனர். இவர் 27ஆம் தேதி விடுதலையாகவுள்ள நிலையில் சரியான சிகிச்சை அளிக்காமல் இருக்கின்றனர் என்றும் குற்றம்சாட்டி வருகின்றனர்.


இதுதொடர்பாக தமிழ்நாடு ஃபார்வேர்ட் ப்ளாக் கட்சி பொதுச் செயலாளர் டி. கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சசிகலாவிற்கு கடந்த 7 நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவரது வழக்கறிஞருக்கு தகவல் அளிக்காதது ஏன். மேலும், மூச்சுத் திணறல் ஏற்பட்டு 12 மணி நேரமாகியும் அவருக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்படவில்லை என வரும் தகவல் அதிர்ச்சியையும் வியப்பையும் அளிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சசிகலாவிற்கு சிறையில் ஏற்பட்டுள்ள உடல்நலக்குறைவு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது இதுகுறித்து விரிவாக விசாரிக்க வேண்டும்:கர்நாடக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கறிஞர் ராஜராஜன் என்பவர் புகார் அளித்துள்ளார். இவரை உடனடியாக கேரளா அல்லது புதுவையில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.