ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த திமிரி அருகே உள்ள தாமரைப்பாக்கம், அருந்ததிபாளையத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ்(53). கூலித்தொழிலாளி.
இவர் கடந்த 17ம் தேதி அதே கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்(23), ஆறுமுகம், கார்த்திகேயன் ஆகியோருடன் சேர்ந்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே தாயம் விளையாடியுள்ளார். அப்போது விளையாட்டு தொடர்பாகச் சுரேஷ், ராமதாசுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த சுரேஷ் அருகிலிருந்த பீர் பாட்டிலை உடைத்து ராமதாசின் கழுத்தில் குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் இருந்த ராமதாசை அருகிலிருந்தவர்கள் மீட்டு திமிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக வேலுார் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி ராமதாஸ் திமிரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து சுரேஷை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்.