திமிரி அருகே மூன்று வீடுகளில் திருட்டு


திமிரி அருகே உள்ள மருத்துவாம்பாடியை சேர்ந்த சிவக்குமார், பள்ளி ஆசிரியர். இவருடைய மனைவி சந்தியா ராணிப் பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் துணை தாசில்தாராக பணியாற்றி வருகிறார். சிவக்குமார், சந்தியா மற்றும் குடும்பத்தினர் தூங்கி கொண்டிருந்த போது மர்மநபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த 6 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் ரொக்கப்பணத்தை திருடினார்கள்.

பின்னர் அவர்கள் அதே பகுதியில் உள்ள சரவணன்-நீலவேணி தம்பதியர் வீட்டின் பூட்டை உடைத்து அரை சவரன் நகை, கால் கொலுசு மற்றும் பணத்தை திருடினர்.

அதைத்தொடர்ந்து அருகே உள்ள ராமமூர்த்தி-அம்சா தம்பதியரின் வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் உள்ளே சென்றனர். அப்போது அவர்களை கண்ட அம்சா திருடன். திருடன். என்று கூச்சலிட்டார். அதனால் ஆத்திரம் அடைந்த மர்மநபர்கள் அங்கு கிடந்த கட்டையால் அம்சாவின் தலையில் தாக்கி விட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் விரட்டி சென்றும் அவர்களை பிடிக்க முடியவில்லை.

இந்த திருட்டு சம்பவம் குறித்து திமிரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று திருட்டு நடந்த வீடுகளில் விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், திருட்டுக்கு ஈடுபட்டவர்கள் அதே பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. மேலும், அவர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.