தமிழக ஆளுநர் ரவி மகாத்மா காந்தியின் பெருமையை சிறுமைப்படுத்தி பேசியதாகக் கண்டித்து ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆற்காடு அடுத்த மேல்விஷாரம், கத்தியவாடி ரோட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் தலைவர் பஞ்சாட்சரம் தலைமை வகித்தார். முன்னாள் நகரத்தலைவர்கள் அல்தாப், அன்வர் பாஷா முன்னிலை வகித்தனர். மேல்விஷாரம் நகரத் தலைவர் அப்துல் சுக்கூர் வரவேற்றார். மாவட்ட சிறுபான்மை துறை தலைவர் நிஷாந்த் அகமது கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில், ஆளுநர் ரவி "காந்தி காலத்தில் பெண்கள் மதிப்பில்லை" என்று பேசியது கண்டனத்திற்குரியது என்று கூறிய காங்கிரஸ் கட்சியினர், காந்தி மீது அவதூறு பரப்பிய ஆளுநரை பதவி நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட துணைத்தலைவர்கள் அமமானுல்லா பாகவி, விநாயகம், ஆற்காடு நகரத்தலைவர் பியாரேஜான், ஆற்காடு வட்டாரத்தலைவர் வீரப்பா, வாலாஜா நகரத்தலைவர் மணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில், ஆளுநர் ரவிக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.