ராணிப்பேட்டை மாவட்டத்தில் டிசம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் மாபெரும் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழா குறித்து மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், புத்தகக் கண்காட்சியில் 60-க்கும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்கள் இடம்பெற ஏற்பாடு செய்ய வேண்டும், தேவையான குடிநீர், கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும், மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலம் உணவுக் கூடம் அமைக்க வேண்டும், மின்சாரத் துறையின் சார்பில் தடையில்லாத மின்சாரம் வழங்க வேண்டும், பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் மாணவ, மாணவிகளை பாதுகாப்புடன் புத்தகக் கண்காட்சிக்கு அழைத்து வர பேருந்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும், மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், அரசுத் துறைகளின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பேச்சாளர்களின் பட்டிமன்றங்கள், கவியரங்கங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வேண்டும், அரசு நலத் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் பல்துறை பணி விளக்கக் கண்காட்சி அரங்குகளை அமைக்க வேண்டும், மாவட்டம் முழுவதும் உள்ள அனைவருக்கும் புத்தகத் திருவிழா குறித்து விளம்பரப்படுத்த வேண்டும் போன்ற பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.

இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ந.சுரேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வெ.லோகநாயகி, மாவட்ட நூலக அலுவலர் பழனி மற்றும் பொதுப்பணித் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை, மின்சார வாரியம் உள்ளிட்ட அரசு துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.