ஆற்காடு அடுத்த லாடவரம் அருகே உள்ள சர்வந்தாங்கல், பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் அருள், விவசாயி. இவரது மனைவி பரிமளர். இவர்களது 2வது மகன் ராகவேந்திரா (13). இவர் 9ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 18ம் தேதி இரவு மாணவன் இருசக்கர வாகனத்தில் பயணித்தபோது விபத்துக்குள்ளாகி படுகாயம் அடைந்தார். ராகவேந்திராவை அக்கம்பக்கத்தினர் மீட்டு ராணிப்பேட்டை சிஎம்சி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு கடந்த 10 நாட்களுக்கு மேலாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ராகவேந்திரா நேற்று மூளை சாவு அடைந்தார். இதனையடுத்து, மாணவனின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.

இதனையடுத்து இவரின் இருதயமும், நுரையீரலும் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனைக்கும், கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் சிஎம்சி மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் அப்பல்லோ மருத்துவ மனைக்கும் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.