தீபாவளியை முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மாம்பாக்கம் பகுதியில் பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட விபத்தில், 4 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், "ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மாம்பாக்கம் பகுதியை சேர்ந்த ரமேஷ் - அஸ்வினி ஆகியோரின் மகள் நவிஷ்கா(4). நேற்று தீபாவளியை முன்னிட்டு, வீட்டில் பட்டாசு வெடித்தனர்,
அப்போது, ரமேஷின் அண்ணன் விக்னேஷ் (31) நாட்டு பட்டாசு வெடித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, விக்னேஷ் வைத்த நாட்டு பட்டாசு சிறுமி மீது சிதறி விழுந்து வெடித்துள்ளது. இதில் சிறுமியின் மார்பு மற்றும் கை சிதறியதாக தெரிகிறது.
இதனால், வலியில் துடித்துக் கொண்டிருந்த சிறுமியை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், ஏற்கனவே சிறுமி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் சிறுமியின் உறவினர்கள் 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்" என்று தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.