ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று நடந்த விபத்தில் 13 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த ரெட்டிவலம் அருகே உள்ள பொன்னியம்மன் பட்டறை பகுதியைச் சேர்ந்தவர் குமார் (30). இவருடைய மனைவி முத்துலட்சுமி (28). இந்த தம்பதிக்கு அனுசுயா (13), ஆகாஷ் (9) என்ற பிள்ளைகள் இருந்தனர்.

இன்று அனுசுயாவின் பிறந்தநாள் என்பதால் குமார் தனது மனைவி, பிள்ளைகள் மற்றும் மாமியாருடன் ரெட்டிவலம் பகுதியில் உள்ள கோயிலுக்கு சென்று வீடு திரும்பினார். அப்போது, இவர்கள் சென்ற கார் சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த லோடு ஆட்டோவின் மீது நிலைதடுமாறி எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அனுசுயா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த நெமிலி காவல்துறையினர் படுகாயம் அடைந்த மற்ற நான்கு பேரையும் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தன்னுடைய பிறந்தநாளுக்கு கோயிலுக்குச் சென்று திரும்பும் போது சிறுமி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமி அனுசுயாவின் இறப்புக்கு அப்பகுதி மக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.