திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா துவங்கியது. தமிழகம் உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் வந்து முருக பெருமானை வழிபடுவர்.

பக்தர்களின் பாதுகாப்பு குறித்து திருத்தணி டி.எஸ்.பி., விக்னேஷ் தமிழ்மாறன் கூறியதாவது:
ஆடிக்கிருத்திகையை ஒட்டி, இன்று 7ம் தேதி முதல், 11ம் தேதி வரை, திருத்தணி நகர எல்லை வரை மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படும்.

அதாவது, அரசு மற்றும் தனியார் பேருந்துகள், இதர வாகனங்கள் மேல்திருத்தணி, புதிய புறவழிச்சாலை, சென்னை - -திருப்பதி தேசிய நெடுஞ்சாலை மற்றும் பைபாஸ் ஆகிய இடங்கள் வரை அனுமதிக்கப்படும்.

ஆட்டோக்கள் மட்டும் திருத்தணி கமலா தியேட்டர் வரை அனுமதிக்கப்படும். பக்தர்களின் வசதிக்காக, எட்டு இடங்களில் மருத்துவ முகாம், 40 இடங்களில் கழிப்பறைகள், 120 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

நல்லாங்குளம், சரவணபொய்கை திருக்குளம், படாசெட்டிகுளம் ஆகிய இடங்களில் படகு சவாரி அமைத்து கண்காணிக்கப்படுவர்.

திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இருந்து, 1,600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

மலைக்கோவிலில் மட்டும், 86 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுதவிர திருத்தணி முழுதும், 189 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படும்.

போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், மூன்று ட்ரோன் கேமரா வாயிலாக போக்குவரத்து கண்காணிக்கப்பட்டு, உடனுக்குடன் சீரமைக்கப்படும்.

திருட்டு சம்பவங்களை தடுப்பதற்காக, இன்ஸ்பெக்டர் தலைமையில், 40 போலீசார் மாறுவேடத்தில் மலைக்கோவில் மற்றும் பக்தர்கள் அதிகளவில் கூடும் இடங்களில் ரோந்து பணியில் ஈடுபடுவர்.

திருத்தணி நகருக்குள் வாகனங்கள் வருவதை தடுக்கவும், கண்காணிக்கவும், மொத்தம், 238 தடுப்புகள் அமைத்து, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபவர்.

இவ்வாறு அவர் கூறினார்.