ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க ஒத்துழைப்பு வழங்காத ஊராட்சி ஒன்றிய தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய திமுக துணை தலைவர் முனியம்மா உட்பட 6 பேர் கவுன்சிலர் திடீரென ராஜினாமா செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 10 வார்டுகள் உள்ளன. இதில் 6 திமுகவும், அதிமுக, பாமக, சுயேட்சை, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா ஒரு கவுன்சிலர்கள் என மொத்தம் 10 கவுன்சிலர்கள் உள்ளனர். ஊராட்சி ஒன்றிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட அனிதா குப்புசாமி நிர்வாகத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர கவுன்சிலர்களுக்கு முறையாக ஒத்துழைப்பு தருவது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த இரு ஆண்டுகளாக ஒன்றிய கவுன்சிலர்களாக இருந்து தங்களது வார்டுக்கு எவ்வித பணியும் செய்யமுடியாததால், திமுக துணை தலைவர் முனியம்மா உட்பட 6 கவுன்சிலர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் சைபுதீனிடம் தங்களது ராஜினாமா கடிதத்தை வழங்கினர். இந்த சம்பவம் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் பொறுப்பு வட்டார வளர்ச்சி அலுவலர்(BDO) கூறும் போது, "ஆறு கவுன்சிலர்களும் கருத்து வேறுபாடு காரணமாக கடிதம் கொடுத்துள்ளனர். அவர்களின் கடிதங்கள் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமைச் செயலகத்திற்கு அந்த கடிதங்களை அனுப்பி உரிய நடவடிக்கை எடுப்பார்" என்று தெரிவித்தார்.

காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் திமுகவை சேர்ந்த 6 கவுன்சிலர்களும் வட்டாரா வளர்ச்சி தலைவரை கண்டித்து கவுன்சிலர் பதையில் இருந்து ராஜினாமா கடிதம் கொடுத்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.