ராணிப்பேட்டை நவல்பூரில் வரசித்தி விநாயகர் கோவில் மகா கும்பாபி ஷேக விழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
வரசித்தி விநாயகர் கோவில்
Thousands of devotees participate in Varasidhi Ganesha Temple Kumbabhishek ceremony at Navalpur, Ranipet
ராணிப்பேட்டை, நவல்பூர், புதுத்தெருவில் முழுவதும் கருங்கல்லால் ஆன வரசித்தி விநாயகர் கோவில் புதிதாக கட்டப்பட்டது. கோவில் மகாகும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை வரசித்தி விநாயகர், பாலமுருகன், துவார பாலகர், நவக்கிரகம், நர்த்தன விநாயகர், தட்சிணா மூர்த்தி, மகா விஷ்ணு. பிரம்மா, துர்க்கை ஆகிய சாமிகளின் கரிகோல ஊர்வலம் நடைபெற்றது.
இந்த ஊர்வலத்தில் சாமிக்கு பொதுமக்கள் மஞ்சள் நீரினால் ஆரத்தி எடுத்து வழிபட்டனர். பின்னர் கோவி லில் யாக சாலையில் யாக குண்டம் அமைத்து புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்கள் வைத்து சபாரத்தின குருக்கள் தலைமையில் 10 சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு வேத மந்திரங்கள் சொல்லி சிறப்பு பூஜை செய்தனர்.
கும்பாபிஷேகம்
நேற்று முன்தினம் காலையில் கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, அஷ் டாதச பூஜை, மஹா பூர்ணா ஹூதி, தீபாராதனையுடன் சிறப்பு பூஜைகளும், மாலையில் பிரவேசபலி. வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், ரக்ஷா பந்தனம், கலார்கர்ஷனம், யாக பூஜை ஹோமம், பூர்ணாஹூதி ஆகிய பூஜைகள் மகா தீபாராதனையுடன் நடந்தது.
நேற்று காலை யாக பூஜை, ஹோமம், தத்துவார்ச்சனை. நாடிசந்தானம், மகா பூர்ணா ஹூதி பூஜை நடந்தது. பின்னர் புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்களை சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் சொல்லி மாடவீதிகளில் ஊர்வலமாக எடுத்து சென்று கோவில் கோபுரத்தில் உள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள்
வரசித்தி விநாயகர், பாலமுருகன், துவார பாலகர், நவக்கிரகம், நர்த்தன விநாயகர், தட்சிணா மூர்த்தி, மகா விஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகிய சாமிகளுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர் சாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனையுடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீர் கோவிலை சுற்றி நின்ற பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. பக்தர்கள் புனித நீரை பாத்திரம், பாட்டில்களில் எடுத்துச்சென்று வீடு, கடைகளில் தெளித்து பூஜை செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜாபேட்டை, திருவலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டு சென்றனர். விழாவிற்கான ஏற்பாடு களை நாட்டாண்மைதாரர்கள். விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் செய்து இருந்தனர்.