பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பள்ளிக்குச் சென்ற மாணவன் வேகத்தடையில் மோதியதில் படுகாயம் அடைந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த திமிரி அருகே உள்ள மோசூர் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் செங்கமலம். தொழிலாளி. இவரது மகன் தினகரன் (17). இவர் ஆற்காட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று ஆரணியிலிருந்து ஆற்காடு நோக்கி சென்ற அரசு டவுன் பஸ்சில் தினகரன் பள்ளிக்குச் சென்றார். பஸ் படிக்கட்டில் தொங்கியபடி சென்றுள்ளார்.
ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் கூட்ரோடு அருகே வந்தபோது அங்குள்ள வேகத்தடையில் பஸ் ஏறி இறங்கியபோது படிக்கட்டில் தொங்கிய படி வந்த தினகரனின் கால் மோதியதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
இதில் அவரது காலில் மாட்டிய ஷீ மடங்கியதில் அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டது. வலியால் துடித்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு விளாப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு. மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து திமிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
படிக்கட்டில் தொங்கியபடி செல்லக்கூடாது என பலமுறை விழிப்புணர்வு ஏற்படுத்தியும் தொடர்ந்து மாணவர்களும் பயணிகளும் பஸ் படியில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். அதனை தடுக்க சம்பந் தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.