ஆற்காடு அருகே அம்மன் கோயில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் மற்றும் அம்மன் தாலி உள்ளிட்ட பொருட்களை மர்ம ஆசாமிகள் திருடி சென்றுள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். 
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த பழைய மாங்காட்டில் 200 ஆண்டு பழமை வாய்ந்த மகாபலி அம்மன் கோயில் உள்ளது. நேற்று காலை அந்த கோயில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

மேலும், இதுகுறித்து ஆற்காடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். மேலும், விசாரணையில் கோயிலின் பூட்டை உடைத்த மர்ம ஆசாமிகள் உள்ளே சென்று உண்டியலை உடைத்து அதிலிருந்த பணம் ₹10 ஆயிரத்தை திருடியுள்ளனர். மேலும் அம்மன் கருவறை கதவையும் உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த தாலி உள்ளிட்ட 3 சவரன் தங்க நகைகளையும், பித்தளை தவளை உள்ளிட்ட பொருட்களையும் திருடி சென்றுள்ளனர். 

இதுகுறித்து ஆற்காடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Source: Dinakaran