தெற்கு டெல்லி பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது வங்கிக் கணக்கில் இருந்து 50 லட்சம் ரூபாயை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிவிட்டதாக சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். 
சில நாள்களுக்கு முன்பு, இரவு 7 மணி முதல் 8.45 மணி வரை பல முறை பிளாங்க் அழைப்பு வந்துள்ளது. அடுத்த அழைப்பில் யாரும் பேசாததால் சில அழைப்புகளை அவர் எடுக்கவில்லை. பிறகு அவரது செல்லிடப்பேசிக்கு வந்த தகவலில், அவரது வங்கிக் கணக்கிலிருந்து 12 லட்சம், 4.6 லட்சம், இரண்டு முறை 10 லட்சம்  என நான்கு பேரின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

வங்கிகளில் பொதுவாக பணப்பரிமாற்றங்கள் செய்யும் போது பல்வேறு நிபந்தனைகள் இருக்கும். ஆனால், ரூ.50 லட்சத்தை இழந்த வங்கிக் கணக்கு, நடப்புக் கணக்கு (கரன்ட் அக்கவுன்ட்) என்பதால் அந்த கட்டுப்பாடுகள் இல்லை. இதனால், எந்த தடையும் இல்லாமல் மோசடி நடந்திருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக நடைபெற்ற முதல் கட்ட விசாரணையில், சிம்ஸ்வாப் முறையில், சைபர் குற்றவாளிகள் பணத்தை திருடி இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மும்பையைச் சேர்ந்த ஜவுளி அதிபரிடம் ரூ.1.8 கோடி இதேமுறையில் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது.