ஆற்காட்டில் யூ டியூப் வீடியோவிற்காக தடை செய்யப்பட்ட காரமான சிப்சை சிறுவனுக்கு கொடுத்து சாப்பிட வைத்த வாலிபர்கள் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
உடல் நலக்குறைவு
ஆற்காடு கிளைபஜார் பகுதியை சேர்ந்தவர் பெருமாள், டிரைவர். இவரது மனைவி திவ்யா. இவர்களது மகன் கிஷோர் (வயது 8). 3-ம் வகுப்பு படித்துவருகிறான். இந்தநிலையில் கிஷோருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மேலும் வாந்தி, மயக்கம், வயிற்றுப் போக்கு ஏற்பட்டு சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவனை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்ததில், அதிக காரம் உள்ள உணவை சாப்பிட்டதால் சிறுவனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக
இதனையடுத்து சிறுவனிடம் பெற்றோர் விசாரித்தனர். அப்போது அந்த சிறுவன் 3 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 5 வாலிபர்கள், கிஷோரை அழைத்துச் சென்று விளையாடி உள்ளனர். அப்போது யூடியூப் வீடி யோவிற்காக சிறுவனிடம் அதிக காரம் உள்ள சிப்சை கொடுத்து சாப்பிட செய்துள்ளனர். சாப்பிடும் முன் இந்த சிப்சை சாப்பிட்டு நீ இறந்து விட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு இல்லை என்று சிறுவனிடம், அந்த வாலிபர்கள் விளையாட்டாக கூறியதாக தெரிகிறது.
தடை செய்யப்பட்ட சிப்ஸ்
அதிக காரம் கொண்ட அந்த சிப்ஸ் தற்போது விற்பனையில் இல்லை. தடை செய்யப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இதனை சிறுவன் சாப்பிடும் போது வீடியோவாக எடுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பே யூ டியூபில் பதிவேற்றம் செய்துள்ளனர். அந்த வீடியோவை நேற்று முன்தினம் பார்த்த சிறுவனின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வாலிபர்களின் வீட்டிற்கு சென்று கிஷோரின் பெற்றோர் அந்த வாலிபர்களுடன் வாக்குவாதத்தில் ஈடு பட்டதாக தெரிகிறது.
பின்னர் இதுகுறித்து கிஷோரின் தாய் திவ்யா ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் ஆற்காடு பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Source : Dinathanthi