தமிழக- ஆந்திர எல்லையில் 20க்கும் மேற்பட்ட யானைக் கூட்டம் சாலையை கடந்து சென்றதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் வனச்சரகம் தமிழகம், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களை இணைக்கும் மிகப்பெரிய வனச்சரகமாக உள்ளது. இங்கு யானை, சிறுத்தை, கரடி, மான் உள்ளிட்டவை உள்ளது. மேலும் ஆந்திர வனச்சரகத்தில் யானைகள் சரணாலயம் உள்ளதால், அங்கு உள்ள யானைகள் தமிழக வனப்பகுதியான குடியாத்தம் வனச்சரகத்தில் அவ்வப்போது நுழைந்து விடுகிறது. அப்போது தமிழக யானைகளுடன் சண்டையிடும் ஆந்திர யானைகள், வழி தவறி குடியாத்தம் மலை கிராமம் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்து விடுகிறது.
அதன்படி நேற்று தமிழக-ஆந்திர எல்லை சோதனை சாவடி அருகே முசலமடுகு கிராம சாலையில் வனப்பகுதியில் இருந்து 20க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக சாலையை கடந்து சென்றது.
அப்போது குடியாத்தம் - பலம நேர் சாலை வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதைப்பார்த்து அதிர்ச் சியடைந்தனர். மேலும் யானைகள் சாலையை கடக்கும் வரை வாகனங்களை அனைவரும் சிறிது தூரத்திலேயே நிறுத்திவிட்டனர்.
யானைகள் சாலையை கடந்து சென்றதை வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து, வாட்ஸ் அப் உட்பட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.