உலகின் நவீன வளர்ச்சியாலும், அழிந்து வரும் காடுகள் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடுகளாலும் பல்வேறு வகையான உயிரினங்கள் அழிந்துவருகின்றன. அவ்வாறு அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்று தான் ஆமை. ஆமைகள் ஊர்வன வகுப்பை சேர்ந்த விலங்குகள். இவற்றில் 356 இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவை தனது உடல் வெப்ப நிலையை சூழலுக்கு ஏற்ப மாற்றி கொள்ளும் தன்மை கொண்டது. இவற்றின் உடலில் முதுகுப்புறம் உள்ள தனித்துவமான குருத்தெலும்பு ஓடுகவசம் போல் செயல்படுகிறது. இவற்றின் ஓடு கடின தன்மை கொண்டது. ஆமைகள் ஆபத்து காலங்களில் கழுத்து மற்றும் தலையை பின்னோக்கி ஓடுக்குள் இழுத்து தன்னை பாதுகாத்து கொள்கிறது. இவை பெரும்பாலும் நீருக்கடியில் வாழ்ந்தாலும் சுவாசிப்பதற்கு நீருக்கு மேலே வருகின்றன. ஆமைகள் இனத்தை பொறுத்து 1 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை நீருக்குள் இருக்கும். இவை பகலில் சுறுசுறுப்பாக இரை தேடுகின்றன. ஆமையின் உணவானது அது வாழும் இடத்தை பொறுத்துமாறுபடுகிறது. நன்கு வளர்ந்த ஆமைகள் நீர்வாழ் தாவரங்களை உண்கின்றன.
இவை நீருக்குள்ளேயோ அல்லது நீரையொட்டியோ வாழ்ந்தாலும் நீருக்கடியில் முட்டையிடாமல் தரையிலேயே இடுகின்றன. இவைசில ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் முட்டையிடுகின்றன. உலகில் நீண்ட காலம் வாழும் உயிரினங்களில் ஒன்றாக ஆமைகள் கருதப்படுகின்றன. பெரும்பாலான ஆமை இனங்கள் 80-150 ஆண்டுகள் வரை வாழ்கின்றன. ஒருசில ஆமை இனங்கள் 150 ஆண்டுகளுக்கு மேல் வாழ்கின்றன. இவை அமைதியான மற்றும் மெதுவாக நகரும் தன்மை கொண்டது. இவற்றின் சராசரி நடை வேகம் மணிக்கு 0.2-0.5 கி.மீ. ஆகும். ஆமைகள் பல மனிதர்களால் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன.
சிலநாடுகளில் ஆமைகள் உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப் படுகின்றன. உணவுக்காகவும், முட்டைகளுக்காகவும் ஆமைகள் வேட்டையாடப்படுகின்றன. இதுவே சில ஆமையினங்களின் அழிவுக்கு வழிவகுத்தது. மேலும் காடுகளை அழித்தல், நீர்நிலைகளை மாசுபடுத்துதல் போன்ற பல்வேறு வகையான இயற்கைக்கு கேடு விளைவிக்கும் நிகழ்வுகளாலும் ஆமைகள் அழிந்து வருகின்றன. இவ்வாறு ஆழிந்து வரும் உயிரினமான ஆமைகளை செல்லப்பிராணிகளாக தத்தெடுப்பதன் மூலம் ஒரு இனத்தின் அழிவு குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத் துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27-ந் தேதி (இன்று) ஆமை தத்தெடுப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.