ராணிப்பேட்டை மாவட்டத்தில், 207 ஊராட்சிகளில் ‘வாழ்ந்து காட்டுவோம்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தின் கீழ், ஆற்காடு ஒன்றியம், மேச்சேரி ஊராட்சியில் மகளிர் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த 20 உறுப்பினர்கள் தொழில் தொடங்க ரூ.75,000 மானியம் பெற்று தையல் இயந்திரங்கள் மூலம் துணிப்பைகள் தைக்கப்படுவதை ஆட்சியர் பார்வையிட்டார்.

இதேபோல், மேச்சேரியில் மற்றொரு தொழில் கூட்டமைப்பைச் சேர்ந்த மகளிர், தொடக்க நிதி ரூ.75,000 மானியம் மற்றும் தங்களின் குழு சேமிப்பு நிதி மூலம் வேர்க்கடலை விதைக்கும் இயந்திரம் வாங்கி, அதை டிராக்டர் வைத்திருக்கும் நபர்களுக்கு வாடகைக்கு விட்டு வருமானம் ஈட்டுகின்றனர்.

செம்பேடு ஊராட்சி, ஒழலை கிராம தொழில் கூட்டமைப்பினர் ரூ.1.5 லட்சம் தொடக்க நிதி மானியம் பெற்று நெகிழி இல்லா இயற்கை முறை நாப்கின்களை உற்பத்தி செய்து வருமானம் ஈட்டி வருகின்றனர். 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறியது: ஆற்காடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 'வாழ்ந்து காட்டுவோம்' திட்டம் மூலம் உற்பத்தியான பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு, திமிரி, வாலாஜாபேட்டை, சோளிங்கர், நெமிலி உள்ளிட்ட 207 ஊராட்சிகளில் வாழ்ந்து காட்டுவோம்' திட்டம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் 234 குழுக்கள் உருவாக்கப்பட்டு ஒவ்வொரு குழுவுக்கும் ரூ.75,000 தொடக்க நிதி மானியம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது, மேலும் 70 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் வங்கியில் கடன் பெறுவதற்கு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப் பட்டுள்ளன என்றார். நிகழ்ச்சியில் மாவட்டத் திட்ட செயல் அலுவலர் கங்காதரன், செயல் அலுவலர்கள் ஜெயக்குமார், நித்யானந்தம், வாசுதேவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.