வாலாஜா வட்டத்தில் காலியாக உள்ள 5 கிராம உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரும் நவம்பர் 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று வாலாஜா வட்டாட்சியர் ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வாலாஜா வட்டத்துக்குள்பட்ட தண்டலம், நரசிங்கபுரம், மாந்தாங்கல், கல்மேல்குப்பம் மற்றும் பாகவெளி ஆகியவற்றில் கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
அந்தப் பணியிடங்களை நிரப்ப மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் உத்தரவின்படி, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் நேரடி நியமனத்துக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
பணியில் சேர 5 - ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்று, எழுதப்படிக்க தெரிந்தவராகவும், வயது வரம்பு கடந்த ஜூலை 1 வரை 21 நிறைவடைந்திருக்க வேண்டும்.
பொதுப் பிரிவினருக்கு 32 வயதுக்கு மிகாமலும், இதர வகுப்பினர் 37 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் வாலாஜா வட்டத்துக்குள்பட்ட பகுதியைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும்.
பணி நியமனங்கள் முறையே நவம்பர் 30– ஆம்தேதி திறனறித்தேர்வு, பின்னர் டிசம்பர் 15, 16 ஆகிய தினங்களில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, அரசு அறிவித்துள்ள இட ஒதுக்கீடு சுழற்சி அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இந்தப் பணியில் சேருவோருக்கு சிறப்பு காலமுறை ஊதியம் ரூ. 11,100 முதல் ரூ. 35,100 வரை வழங்கப்படும். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பங்களை, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளமான http://ranipet.nic.in,ல் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு, வாலாஜா வட்டாட்சியர்,அலுவலகத்துக்கு நேரில் வந்து தெரிந்து கொள்ளலாம். பூர்த்திசெய்த விண்ணப்பங்கள் யாவும் வருவாய் வட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம், வாலாஜா வட்டம், வாலாஜாபேட்டை என்ற முகவரிக்கு நேரிலோ (அ) பதிவு தபால் மூலமாகவோ வரும் 07.11.2022 மாலை 5.45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.