அரக்கோணம் போலாட்சியம்மன் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் வகுப்பறையின் மேற்கூரையில் இருந்து சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்தன. நல்வாய்ப்பாக 51 மாணவ, மாணவிகள் காயமின்றி தப்பினர்.
அரக்கோணம் பஜார் பகுதியில் உள்ள இந்தப்பள்ளியில் வெள்ளிக்கிழமை 1 மற்றும் 2-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஓர் அறையில் வகுப்புகள் நடைபெற்றன. மதியம் மாணவர்கள் அந்த அறையில் இருந்து மதிய உணவுக்காக வெளியேறிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அறையின் மேற்கூரையில் இருந்து சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. இதில் அங்கு யாரும் இல்லாததால் அவர்கள் காயமின்றி தப்பினர்.
தகவல் அறிந்த நகர்மன்றத் தலைவர் லட்சுமிபாரி, நகராட்சி ஆணையர் லதா, பொறியாளர் ஆசீர்வாதம், சுகாதார அலுவலர் மோகன், வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஆறுமுகம், அருள்லிங்கம் ஆகியோர் பள்ளிக் கட்டடத்தைப் பார்வையிட்டு, தலைமை ஆசிரியை மரியஜெயசீலியிடம் விசாரித்தனர். பின்னர் நகராட்சி ஆணையர் லதா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மேற்கூரை அடிப்பாக சிமென்ட் பூச்சு விழுந்த கட்டடம் நல்ல நிலையிலேயே உள்ளது. அடிப்பூச்சு விழுந்ததற்கான காரணம் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. அந்த வகுப்பறையில் பயின்ற மாணவர்களுக்கு எதிரில் உள்ள தீபாய்ந்த அம்மன் கோயிலின் தியான மண்டபத்தில் கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பராமரிப்பு பணிகள் முடிந்தபின், கட்டடம் மீண்டும் பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என்றார்.