ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி பகல் ஒரு மணிவரை 52 லட்சத்து 81 ஆயிரத்து 647 பனை விதைகள் நடப்பட்டது. 288 பஞ்சாயத்துகளில் 880 இடங்களில் 80 ஆயிரம் பேர் இப்பணியில் ஈடுபட்டனர்.

இந்த சாதனை நிகழ்வை, எலைட் வேர்ல்ட் ஆஃப் ரெக்கார்ட்ஸ், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி, தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய நான்கு நிறுவனங்களின் நடுவர்கள் தங்களுடைய நிறுவனத்தின் ஆய்வாளர்களை வைத்து ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த உலக சாதனை நிகழ்வில், வாலாஜா அடுத்த தென்கடப்பந்தாங்கல் கிராமத்தில் கைத் தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி பங்கேற்று பனை விதைகள் நடவு செய்தார். 

இந்த சாதனை நிகழ்வுக்கான சான்று வழங்கும் விழா ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மாலை நடந்தது. 

விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோரிடம் உலக சாதனை நடுவர்கள் எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறு வனத்தின் நடுவர் அமித் கே ஹிங்ரோனி, ஏசியன் ரெக்கார்ட் அகாடெமி நடுவர் செந்தில்குமார், இந்தியா ரெக்கார்டு அகாடமி மூத்த சாதனை பதிவாளர் ஜெகநாதன், தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் மூத்த பதிவு மேலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் வழங்கி பாராட்டினர். 
விழாவில் துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.