ஆற்காடு அடுத்த திமிரி ராமபாளையம், வேலாயுதபாணி தெருவை சேர்ந்த கதிர்வேல் மகன் கலையரசன் (21). பெயின்டர். இவரை முன்விரோதம் காரணமாக கடந்த ஆக.2ம் தேதி திமிரி ராமபாளையம் ரோட்டு தெருவை சேர்ந்த தினகரன் (45). அவரது மகன் அசோக்குமார் (25) உள்ளிட்ட சிலர் வெட்டி கொலை செய்தனர். இதனையடுத்து திமிரி போலீசார் தினகரன், அசோக்குமார் ஆகியோரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இக்கொலையில் தொடர்புடைய திமிரி ராமபாளையம் ரோட்டு தெருவை சேர்ந்த சரத் (எ) சரத்குமார் (31) என்பவரை போலீசார் தேடி வந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் உள்ள மாமியார் வீட்டில் அவர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.

திமிரி இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மற்றும் சிலம்பு, விஜயகுமார் உள்ளிட்ட போலீசார் வெண்பாக்கம் சென்றனர். ராந்தம் கூட்டு ரோட்டில் பஸ்சுக்காக காத்திருந்த சரத் (எ) சரத்குமாரை சுற்றி வளைத்து கைதுசெய்தனர்.

அவரை திமிரி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.