ராணிப்பேட்டை டிஎஸ்பி அலுவலகத்தில் வடக்கு மண்டல ஐ.ஜி. என்.கண்ணன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக காவல் துறையில் 6 ஐபிஎஸ் அதிகாரிகளின் பணியிடங்களை மாற்றம் செய்து, தமிழக அரசு அக்டோபர் முதல் வாரத்தில் உத்தரவு பிறப்பித்தது.
இதில், சென்னை ஆயுதப்படையில் ஐ.ஜி.யாக இருந்த என்.கண்ணன், வடக்கு மண்டல ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டார்.
இதையடுத்து, சென்னை வடக்கு மண்டலத்துக்குட்பட்ட வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களை உள்ளடக்கிய சரக டிஐஜி அலுவலகம், மாவட்டக் காவல் கண்காணிப் பாளர்கள் அலுவலகம், மாவட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம், காவல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், வடக்கு மண்டல ஐ.ஜி.யாக என்.கண்ணன் பொறுப் பேற்ற பின், முதன் முறையாக ராணிப்பேட்டை உள்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, ராணிப்பேட்டை உள்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் கீழ் உள்ள காவல் நிலைய எல்லைக்குள் சட்டம் ஒழுங்கு நிலவரம், நிலுவை வழக்குகள் உள்ளிட்டவை குறித்துக் கேட்டறிந்து, கோப்புகளை ஆய்வு செய்ததாகக் கூறப்படுகிறது.
முன்னதாக அவருக்கு ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன் மலர்க் கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர், உள்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் மரக்கன்று நட்டார். ஆய்வின்போது, ராணிப்பேட்டை உள்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் பிரபு உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.