கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராணிப்பேட்டை மாவட்டத்துக்குட்பட்ட வாலாஜா, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம், நெமிலி, கலவை ஆகிய வருவாய் வட்டங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடத்துக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள தகுதியான நபர்கள் விவரம் குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரிடமிருந்து பெறப்படும் பட்டியல் மற்றும் நேரடியாக அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் பெறப்படும் தகுதியான நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் நேரடி நியமன முறையில் இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்படவுள்ளனர்.
இந்தப் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் நிரந்தரமாக குடியிருந்து 1.7.2022 தேதியில் குறைந்த பட்சம் 21 வயதும் அதிகபட்சமாக பொதுப் பிரிவினர் 32 வயதுக்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
இதரர் (BC/BC(M)/MBC,DNC/ SC/SC(A)/ST) பிரிவினர் 37-வயதுக்குட்பட்டவராக இருக்கலாம். குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தமிழில் நன்கு எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மிதி வண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பத்தை ஞாயிற்றுக்கிழமை முதல் (அக்.10) http://ranipet.nic.in என்ற
இணையதள முகவரியில் தரவிரக்கம் செய்து கொள்ளலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அந்தந்த வட்டங்களிலுள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ 7.11.2022 அன்று மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.