முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட மோதலில் சமையல் மாஸ்டருக்கு கத்தி குத்து விழுந்தது.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அஜித்குமார் (22). இவர் ஆற்காட்டில் உள்ள ஒரு ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த உள்ளாட்சித் தேர்தல் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி விழாவின் வரவு செலவு கணக்கு கேட்டது சம்பந்தமாக அஜித்குமாருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த யுவராஜ் என்பவருக்கு முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு அஜித்குமார் தனது நண்பர் சுதாகர் மற்றும் நண்பர்களுடன் பெருமாள் கோயில் தெரு அருகில் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது யுவராஜ் மற்றும் அவரது நண்பர்கள் கோகுல், தானேஷ்குமார், தீனா (எ) தினகரன் ஆகியோர் அங்கு வந்துள்ளனர். கோயில் திருவிழாவில் கணக்கு கேட்டது சம்பந்தமாக இருவருக்கும் மீண்டும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த யுவராஜ் மற்றும் அவரது நண்பர்கள் அஜித்குமார் தரப்பினரை தாக்கியுள்ளனர். மேலும் யுவராஜ் காய்கறி வெட்டும் கத்தியால் அஜித்குமார் கழுத்து, மார்பு, முதுகு உட்பட பல் வேறு இடங்களில் சரமாரியாக குத்தி உள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த அஜித்குமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப் பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து சுதாகர் திமிரி போலீசில் நேற்று புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி, வழக்கு பதிவு செய்து தானேஷ்குமார் (23), தீனா (எ) தினகரன் (36) ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தார். மேலும் தலைமறைவான யுவராஜ் கோகுல் ஆகியோரை தேடி வருகின்றனர்.