போராட்டத்தில் பங்கேற்று பணி செய்ய மறுக்கும் கிராம நிர்வாக அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரக்கோணம் கோட்டாட்சியர் ஆர்.பாத்திமா தெரிவித்தார்.

அரக்கோணம், நெமிலி ஆகிய இரு வட்டங்களில் பணி புரியும் இருகிராம நிர்வாக அலுவலர்களை அண்மையில் கோட்டாட்சியர் ஆர்.பாத்திமா பணியிடமாறுதல் செய்து உத்தரவிட்டிருந்தார்.

இதை ஏற்க மறுத்து கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் அண்மையில் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து செவ்வாய்க்கிழமை முதல் பணி செய்ய மறுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து, கோட்டாட்சியர் ஆர்.பாத்திமா செவ்வாய்க்கிழமை, அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

விஏஓ-க்கள் போராட்டம் தேவையில்லாத ஒன்று. அவர்களது பணிகளை ஆய்வு செய்யக் கூடாது எனவும், அவர்களது கிராமம் குறித்து தனித்தனியே ஆய்வு நடத்தக்கூடாது எனவும், அப்படி நடத்தினால் உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்து கோட்டாட்சியரான என்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சில விஏஓ-க்கள் மிரட்டுகின்றனர். செவ்வாய்க்கிழமை வருவாய்த்துறையின் வாட்ஸ்அப் குழுவில் இருந்து விஏஓ-க்கள் அவர் களாகவே வெளியேறி விட்டனர். வெளியேறாத விஏஓ-க்களை அவர்கள் மிரட்டி வெளியேற செய்துள்ளனர். ஏற்கெனவே பல விஏஓ-க்கள் மீது புகார்கள் உள்ள நிலையில் அதையும் விசாரிக்கக்கூடாது என்கின்றனர்.

தொடர்ந்து, விஏஓ-க்கள் நடத்தும் போராட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கும் நிலை உருவாகலாம்.

எனவே விஏஓ-க்கள் பணிக்கு திரும்ப வேண்டும். பணியிட மாறுதல் என்பது அரசு சட்டவிதிகளின் படி தான் நடைபெறுகிறது.

எனவே பணியிட மாறுதலை ஏற்று புதிய இடத்தில் மாறுதல் செய்யப்பட்ட விஏஓ பணியில் சேர வேண்டும்.

தொடர்ந்து போராட்டத் தில் ஈடுபட்டுள்ள விஏஓ-க் கள் பணிக்கு வரவில்லையென்றால், அவர்களின் பணிகளை வருவாய் ஆய்வாளர்கள் மேற் பார்வையில், கிராம சிப்பந்திகள் மூலம் மேற்கொள்ள உள்ளோம். விஏஓ-க்கள் புதன்கிழமை பணிக்கு திரும்ப வேண்டும். இல்லாவிட்டால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.