Govt bus collides with motorcycle near Anaikut; 2 people including a student were killed


அணைக்கட்டு அருகே மோட்டார்சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் பள்ளி மாணவன் உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த ஏரிப்புதூர் புதுமனை பகுதியைச் சேர்ந்தவர் முரளி. இவர் ஊனை வாணியம்பாடி ஊராட்சி மன்ற துணைத் தலைவராக உள்ளார். இவரது மூத்த மகன் நந்தகுமார் (வயது 18). பாலிடெக்னிக்கில் படித்துவந்த இவர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார். அதேப் பகுதியைச் சேர்ந்த பாபு என்பவரது மகன் தேவா (16). அணைக்கட்டு அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் நேற்று பகல் நந்தகுமார் அவரது மோட்டார் சைக்கிளில் அணைக்கட்டுக்கு சென்றுள்ளார். அப்போது தேவாவை தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அங்கு வேலை முடிந்தவுடன் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஏரிப்புதூர் நோக்கி பகல் 12.30 மணிக்கு புறப்பட்டனர்.

அங்குள்ள பெட்ரோல் பங்க் எதிரே சென்று கொண்டிருந்தபோது ஏரிப்புதூரில் இருந்து வேலூர் நோக்கி வந்த அரசு டவுன் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த நந்தகுமார் மற்றும் தேவா ஆகியோர் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம டைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அணைக்கட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் பள்ளிகொண்டா இன்ஸ் பெக்டர் கருணாகரன், சப் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம் பாறை அரசு மருத்துவம்னைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் ரமேஷ் என்பவரிடம் அணைக்கட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஊனை வாணியம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் கீதா வெங்கடேசன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.