ராணிப்பேட்டையில் சான்ட்விச் சாப்பிட்ட 3 குழந்தைகள் உடல்நலம் பாதிப்பு
3 children who ate sandwiches in Ranipet have suffered health problems


ராணிப்பேட்டை ரஷீத் கேன்டினில் சாண்ட்விச் சாப்பிட்ட சிறுவர்களுக்கு வாந்தியுடன் உடல் நலக்கோளாறு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து அங்கு ஆய்வு செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கெட்டுபோன பிரட் மற்றும் பழங்களை கைப்பற்றி குப்பையில் கொட்டி அழித்ததோடு அந்த கடையை இழுத்து பூட்டி சீல் வைத்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கோட்டை மேட்டு காலனி பகுதியை சேர்ந்தவர் சாலமன். இவர் அந்த பகுதியில் தேவ ஆலயம் ஒன்று நிறுவி ஊழியம் செய்து வருகிறார்.

ஞாயிற்றுக்கிழமை மாலை ராணிப்பேட்டை ராஜேஸ்வரி திரையரங்கம் எதிரே செயல்பட்டு வரும் உப்பு பிஸ்கட்டுக்கு பேமஸ் என்று உணவு பிரியர்களால் புகழப்பட்ட ரஷீத் கேண்டினுக்கு சாலமன் தம்பதியினர் தங்கள் மகன் உள்ளிட்ட 3 சிறுவர்களை அழைத்துச்சென்றனர்.

அங்கு சிறுவர்கள் சாண்ட்விச் கேட்டதால் சாலமன் சிறுவர்களுக்கு சாண்ட்விச் வாங்கிக் கொடுத்துள்ளனர் அதனை உட்கொண்ட சிறுவர்கள் 3 பேரும் சிறிது நேரத்திலேயே ஒவ்வாமை காரணமாக வாந்தி உள்ளிட்ட உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயக்க நிலைக்கு சென்றுள்ளனர்.

இதையடுத்து 3 சிறுவர்களையும் ஆற்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர்களை ஆய்வு செய்த மருத்துவர்கள் , மூன்று சிறுவர்களுக்கும் ஃபுட் பாய்சன் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

தொடர் சிகிச்சை மேற்கொண்டும் சிறுவர்களின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படாத காரணத்தினால் வேலூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த உணவு பாதுகாப்பு துறை வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறையினர், போலீஸ் பாதுகாப்புடன் ரஷீத் கேண்டினில் ஆய்வு மேற்கொண்டனர்.

அங்கு கெட்டுபோய் பூஞ்சைகளுடன் காணப்பட்ட பிரட் துண்டுகளையும் ஜூஸ் போடுவதற்காக வைத்திருந்த அழுகிய மாதுளம் பழங்களையும் கைப்பற்றி குப்பை தொட்டியில் கொட்டி அழித்தனர்.

உடலுக்கு கேடு விளைவிக்க கூடிய பல வர்ணகலவை ரசாயணாங்களை அங்கிருந்து கைப்பற்றிய அதிகாரிகள் ரஷீது கேண்டின் உரிமையாளருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி கடையை இழுத்துப்பூட்டி சீல்வைத்தனர். இதற்கிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 பேரும் தீவிர சிகிச்சைக்கு பின்னர் உடல் நலம் பெற்று வீடுதிரும்பினர்.

வீக் எண்ட் ஆனால் பைக்கை எடுத்துக் கொண்டு இலக்கில்லாமல் சுற்றும் ஊர் குருவி பைக்கர் ஒருவர் இந்த கேண்டீனில் உப்பு பிஸ்கட் பேமஸ் என்று யூடியூப்பில் வீடியோ வெளியிட்டு இருப்பது குறிப்பிடதக்கது.