Ranipet district collector's cell phone is blocked and money is cheated in a sophisticated way!
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் செல்போனை முடக்கி நூதன முறையில் பணம் மோசடி முயற்சி நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டராக இருப்பவர் பாஸ்கர பாண்டியன். இன்று காலை அவரது செல்போனை ஒரு மோசடி கும்பல் முடக்கியது. பின்னர் வேறு ஒரு நம்பரை பயன்படுத்தி அதில் அவரது புகைப் படத்தை அடையாளமாக வைத்தனர்.
அந்த செல்போன் மூலம் பலருக்கு ஒரு தகவல் பறந்தது. அதில் நான் ஒருவருக்கு பரிசு தரவேண்டியுள்ளது. தற்போது நான் மீட்டிங்கில் இருக்கிறேன். என்னிடம் கார்டு எதுவும் இல்லை. இன்னும் ஒரு மணி நேரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு பரிசு பொருட்கள் அனுப்பவேண்டியுள்ளது. எனவே அதற்கான ஏற்பாடுகள் செய்ய முடியுமா? நீங்கள் வாங்கும் பரிசு கார்டுகளுக் குரிய பணத்தை இன்றைக்குள் திருப்பி தந்துவிடுகிறேன் என் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த தகவலை பார்த்த நபர் உங்களுக்கு எத்தனை கார்டுகள் தேவை என்று திரும்ப கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர் ஒவ் வொன்றும் தலா ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள அமேசான் பே-இ பரிசு கார்டுகள் 30 தேவை.
நன்றி அல்லது வாழ்த்துக்கள் என்ற தலைப்பில் இருக்க வேண்டும். இது மிக அவசரமாக தேவை உடனே அனுப்பவும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைப்பார்த்ததும் சந்தேகம் அடைந்த நபர் கலெக்டர் பாஸ்கர பாண்டியனிடம் தொடர்பு கொண்டு இந்ததகவல் குறித்து தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த கலெக்டர் தனது செல் போனை பார்த்தார்.
அப்போது தான் அது முடக்கப்பட்டிருப்பதும் தனது பெயரில் நூதன முறையில் பணம் மோசடி செய்ய முயற்சி நடப்பதும் தெரிய வந்தது.
உடனே தனது செல்போனில் இருந்து தனது புகைப்படத்தை பயன்படுத்தி ஒரு கும்பல் பணம் மோசடி செய்ய முயற்சிப்பதாகவும் இதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் தகவல் அனுப்பினார்.
இது குறித்து மாவட்ட சைபர்கிரைம் போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த மாதம் வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பெயரை பயன்படுத்தி இதே பாணியில் பணம் மோசடி முயற்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Source: Malaimurasu