ஆற்காட்டில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று முதல் நடைபெற்று வருகிறது.
ஆற்காடு அண்ணா சாலை, பஜார் வீதி, வேலூர் மெயின் ரோடு,ஆரணி சாலை உட்பட பல்வேறு பகுதிகளில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருப்பதால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

இதுகுறித்த புகார் மனுக்கள் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென நெடுஞ்சாலைத் துறை சார்பில் கடைக்காரர்களுக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆக்கிரமிப்புகள் அகற்றுவதற்கான காலக்கெடு முடிந்த நிலையில் நேற்று நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது.

நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சரவணன் தலைமையில் உதவி பொறியாளர் வடிவேல் மற்றும் பணி மேற்பார்வையாளர்கள், சாலைப்பணியாளர்கள் கொண்ட குழுவினர் ஜேசிபி இயந்திரம் மூலமாக கடைகளின் முன்பு செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை, அதிரடியாக அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பல இடங்களில் கடைக்காரர்களே மேற்கூரைகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை ஏற்கனவே அகற்றி விட்டனர். மேற்கண்ட ஆக்கிரமிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க ஆற்காடு டவுன் இன்ஸ்பெக்டர் விநாயக மூர்த்தி தலை மையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.