தக்காளி வைரஸ்? தக்காளிக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை: ராதாகிருஷ்ணன் விளக்கம்! | Tamilnadu Health Secretary Radhakrishnan Explained that There is no Relation Between Tomato and Tomato Fever


நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக தடுப்பூசி போடும் பணி தீவிரமடைந்து வருகிறது. 3-வது அலை ஓய்ந்து, பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா தொற்று குறைந்தாலும், தற்போது மீண்டும் சில மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, டெல்லி, ஹரியானா, குஜராத், மகாராஷ்டிரா, மிசோரம், கேரளா ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது.

கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த கேரள மாநிலத்தில் தற்போது புதிய வகை வைரஸ் ஒன்று பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. தக்காளி வைரஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வகை வைரஸ் குழந்தைகளை மட்டுமே அதிகம் தாக்கி வருகிறது. கொல்லம் மாவட்டத்தில் கிட்டத்தட்ட 85-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தக்காளி வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

காய்ச்சல், உடல் வலி, கை, கால்கள் வெள்ளை நிறமாக மாறுதல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இது மாதிரியான அறிகுறிகள் குழந்தைகளுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு வருமாறு கேரள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. முதற்கட்டமாக, ஆரியங்காவு, அஞ்சல், நெடுவத்தூர் ஆகிய பகுதிகளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தக்காளி வைரஸுக்கு அதிகளவில் பாதிக்கப்படுவதால் பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த வைரஸுக்கு தக்காளி வைரஸ் என பெயரிடப்பட்டுள்ளாதால், மக்கள் உணவில் அதிகம் பயன்படுத்தக் கூடிய தக்காளியால் இந்த வைரஸ் பரவுமோ என தமிழக மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தக்காளி வைரஸுக்கும், தக்காளிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தக்காளி வைரஸ் என்பது ஏற்கனவே சிக்கன் குன்யாவால் பாதிக்கப்பட்டோருக்கு ஏற்படும் ஒரு புதிய வகைத் தொற்று எனவும், நல்ல தண்ணீரால் உருவாகும் கொசுவினால் இந்த வைரஸ் பரவுவதாகவும் தெரிவித்தார்.

இந்த வைரஸ் தாக்கும்போது உடலில் சிவப்பு நிற புள்ளிகள் தோன்றுவதால் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கும் தக்காளிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனவும் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்தார். இந்த வைரஸ் குறித்து கேரள அதிகாரிகளிடம் விவாதித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், எந்த தொற்றையும் சமாளிக்க தமிழக சுகாதாரத்துறை தயாராக உள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் உறுதிபடத் தெரிவித்தார்.