சென்னையில் கொலைசெய்யப்பட்டு காவேரிப்பாக்கம் அருகே டிரம்மிள் வைத்து புதைக்கப்பட்ட முதியவரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.

சென்னை வளசரவாக்கம் ஆற்காடு ரோடு பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (வயது 80). இவருக்கு காஞ்சனா, யமுனா, பரிமளா என மூன்று மகள்களும், குணசேகரன் (55) என்ற ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணமாகி தனித் தனியே வசித்து வருகின்றனர். குமரேசன் மனைவி கடந்த 2019-ம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக இறந்துள்ளார். இதே போல் மூத்த மகள் காஞ்சனாவின் கணவரும் கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார்.

இதனால் காஞ்சனா அவரது தந்தையுடன் இரண்டாவது மாடியில் உள்ள வீட்டில் வசித்து வந்துள்ளார். குமரேசனின் மகன் குணசேகரன் தனது மனைவி மற்றும் மகன்களுடன் முதல் தளத்தில் வசித்து வருகிறார். கீழ் தளத்தில் கடை வாடகைக்கு விடப்பட்டுள்ளது. வடபழனி பகுதியில் குமரேசனுக்கு சொந்தமான காம்ப்ளக்ஸ் இருந்துள்ளது. இதன் மூலம் வரும் வாடகை பணத்தை, குமரேசன் தனது மகள்களுக்கு செலவு செய்ததாகவும், இதனால் தந்தை, மகன் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.

இந்தநிலையில் காஞ்சனா கடந்த 15-ந் தேதி மந்தைவெளி பகுதியில் நடைபெற்று வரும் வீட்டு வேலையை கவனிக்க சென்றார். 19-ந்தேதி திரும்பி வந்த போது, வீடு முழுக்க இரத்த கரையுடன், துர்நாற்றம் வீசியது. தனது தந்தையை காணவில்லை. குணசேகரனை போனில் தொடர்பு கொண்ட போது அவரது செல் போன் சுவிட்ச் ஆப் என வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த காஞ்சனா வளசரவாக்கம் போலிசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குருஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் குமரேசன் கொலை செய்யப்பட்டு, டிரம்மில் அடைக்கப்பட்டு ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் தஞ்சை நகர் பகுதியில் வசிக்கும் ரியல் எஸ்டேட் புரோக்கர் வெங்கடேசன் என்பவருடைய இடத்தில் புதைக்கப்பட்டது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குருஸ் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலிசார் கடந்த 19-ந் தேதி, காவேரிப்பாக்கம் விரைந்து வந்து, வெங்கடேசனிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் குணசேகரனுக்கு, தனக்கு சொந்தமான வீட்டுமனையை மாதம் ரூ.2 ஆயிரத்துக்கு வாடகைக்கு விட்டதும், அதில் மினி வேனில் ஒரு டிரம்மை கொண்டு வந்து அதே பகுதியைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி பெருமாள் உதவியுடன் புதைக்கப்பட்டதும் தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து நேற்று காலை குமரேசனின் உடலை தோண்டி எடுக்கும் பணி நடைபெற்றது. நெமிலி தாசில்தார் ரவி, குமரேசன் உறவினர்கள் ஸ்ரீதர், ஆனந்தன், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவர்கள் மகேந்திரன், தீபா, வளசரவாக்கம் இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குருஸ், காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் மணிமாறன், தடயவியல் நிபுணர்கள் சொக்கநாதன், பாரி, கிராம நிர்வாக அலுவலர் தேவி ஆகியோர் முன்னிலையில் தோண்டி எடுத்தனர்.

அப்போது 3 அடி உயரமுள்ள பிளாஸ்டிக் டிரம்மில் குமரேசனின் உடல் போர்வையால் சுருட்டி அடைக்கப்பட்டு, உடல் அசையாமல் இருக்க தலையணை மற்றும் சாக்கு பைகள் மூலம் மூடப்பட்டு இருந்தது. உடல் அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசியது.

பின்னர் அது குமரேசனின் உடல்தானா என்பது குறித்து அவருடைய உறினர்களிடத்தில் உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது முதியவரின் தலையில் வலது பக்கத்தில் பலத்த காயம் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

தலை மறைவாக உள்ள அவரது மகன் குணசேகரனை பிடித்து விசாரணை மேற்கொண்ட பின்னரே, கொலைக்கான காரணம், கொலையில் ஈடுபட்டது எத்தனை பேர் உள்ளிட்ட விவரங்கள் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் கடந்த மூன்று நாட்களாக பரபரப்பு காணப்பட்டது.