அரக்கோணம் அடுத்த மூதுார் திரவுபதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ரீட்டா பெர்னான்டோ (89). மூதுார் அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனியாக வசிக்கிறார். இவரை நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் தாக்கி செயின் பறித்தார். இதில் காயம்டைந்த அவர் அரக்கோணம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தாக்குதலில் காயமடைந்த ரீட்டாபெர்னான்டோ கூறியது:

நேற்று (நேற்று முன்தினம்) இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தேன். இரவு 11.30 மணிக்கு என் வீட்டை ஒருவர் தட்டினார். திறக்கவில்லை. ஓட்டைப்பிரித்து உள்ளே இறங்க முடியாத அவன், பின்பக்க கதவை உடைத்து திறந்து வீட்டுக்குள் வந்தான். என்னை தாக்கி, தலையணையால் முகத்தை அழுத்தினான். கத்தியை காட்டி மிரட்டி எனது செயினை கேட்டான். தரமறுத்த என்னை தாக்கி எனது 6 பவுன் செயினை பறித்துச்சென்றான்.மேலும், திரும்பவும் நான் வருவேன். செலவுக்கு ரூ.10 ஆயிரம் தர வேண்டும். இங்கு நடந்த விஷயங்களை யாரிடமாவது சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டிவிட்டு சென்றான். அவன் அங்கிருந்து சென்ற பிறகு எதிர் வீட்டை சேர்ந்த சங்கர் (30) என்பவரிடம் உதடுகளில் ரத்தம் ஒழுகிய ஆசிரியை ரீட்டா பெர்னான்டோ, மேஸ்திரி பிரபு. நிலையில் நடந்த விவரங்களை சொன்னேன். சங்கர் பல இடங்களில் தேடியதில் ஓரிடத்தில் மறைந்திருந்த வாலிபரை பிடித்தனர்.

அதன்பிறகே என்னிடம் செயின் பறித்தவன் என்னுடைய முன்னாள் மாணவரான அதே ஊரைச் சேர்ந்த பிரபு (30) என்பது தெரிந்தது. அவனுக்கு திருமண மாகி 3 பெண் பிள்ளைகள் உள்ளனர். கட்டட மேஸ்திரி வேலை செய்கிறான்.

தினமும் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க கூடியவன். நான் வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்டு செயின் பறித்துள்ளான். அந்த செயினை சங்கர் மீட்டுக்கொடுத்தார். என்னுடைய மகள் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் வசிக்கிறார்.அவருடன் அதி காலை 2 மணிக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

இச்சம்பவம் குறித்து அரக்கோணம் தாலுகா போலீசாரிடம் ரீட்டா பெர்னான்டோ புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் சேதுபதி வழக்குப்பதிவு செய்து தலைமை ஆசிரியையிடம் செயின் பறித்த கட்டட மேஸ்திரி பிரபுவை கைது செய்தார்.