ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏரி, குளங்களில் மண் எடுக்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை பராமரிப்பில் உள்ள ஏரி, குளங்களில் விவசாய நிலத்தை மேம்படுத்துதல், மண்பாண்டங்கள் செய்தல் மற்றும் இதர பயன்பாட்டிற்கு மண் எடுக்க தகுதிவாய்ந்த ஏரி குளங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஏரி, குளம், குட்டைகளில் இருந்து பொதுமக்கள், மண்பாண்டம் செய்பவர்கள், விவசாயிகள் விவசாய தேவைகளுக்காக வண்டல் மண், களிமண், சவுடு மண் ஆகியவற்றை இலவசமாக எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்படும். அனுமதி பெற விரும்புவோர் ராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு அரசிதழில் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அந்தந்த பகுதிகளில் உள்ள வருவாய்த்துறை அலுவலகம், வேளாண்மை துறை அலுவலகங்களில் வழங்கிட வேண்டும். இவைகள் உதவி இயக்குனர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை வாயிலாக மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பித்து அனுமதி பெற்றுக்கொள்ளலாம்.

விவசாய நிலத்தை மேம்படுத்துதல், மண்பாண்டங்கள் செய்தல், வீடு கட்டுதல் உள்ளிட்ட சொந்த பயன்பாடு மற்றும் இதர பயன்பாட்டிற்கு தேவையான வண்டல் மண், களிமண், சவுடு மண், கிராவல் மண் ஆகியவற்றை பட்டியலில் உள்ள தங்கள் கிராம ஏரி குளங்களில் இருந்து எடுத்துக்கொள்ள அனுமதி பெற்று பயனடையலாம்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.