வாலாஜாபாத், :புதுச்சேரி - திருப்பதி சாதாரண ரயில், விரைவு ரயிலாக மாறிய பின், இரு மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டதால், ரயில் பயணியர் அதிருப்தி அடைந்துஉள்ளனர்.
புதுச்சேரியில் இருந்து, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம் வழியாக, திருப்பதி வரையில், டீசல் ரயில் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா ஊரடங்கு காலத்தில், இச்சேவை ரத்து செய்யப்பட்டது.நிறுத்தப்பட்ட ரயில் சேவையை, மீண்டும் துவக்க வேண்டும் என, ரயில் பயணியரின் கோரிக்கையை ஏற்ற ரயில்வே நிர்வாகம், ஏப்., 1ல் இருந்து மீண்டும் ரயில் சேவை துவக்கியுள்ளது. இதில் சில மாற்றங்களை செய்துள்ளது.குறிப்பாக, புதுச்சேரி - திருப்பதி டீசல் ரயில் சேவையை, மின்சார ரயில் சேவையாக மாற்றி, விரைவு ரயிலாக இயக்குகிறது.விரைவு ரயிலாக இயக்குவதால், குறைந்த வருவாய் கிடைக்கும் சிறிய ரயில் நிறுத்தங்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளன.மேலும், சாதாரண ரயில் கட்டணத்தைவிட, விரைவு ரயிலுக்குரிய கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இது, சாதாரண ரயிலில் பயணம் செய்யும் கிராமப்புற மக்களுக்கு, கூடுதல் சுமையாக தெரிகிறது.ரயில் பயணியர் கூறியதாவது:அரக்கோணம் - செங்கல்பட்டு ரயில் வழித்தடத்தில், திருமால்பூர் ரயில் நிலையத்தில் இருந்து, ரெட்டிபாளையம் ரயில் நிலையம் வரையில், 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.சற்று கூடுதல்சென்னை - கடற்கரை வரையில், விரைவு மின்சார ரயிலில் செல்வோருக்கும், இந்த கட்டணம் பொருந்தும். இவர்கள், மின்சார விரைவு ரயிலில் பயணம் செய்யலாம். காஞ்சிபுரம், வாலாஜாபாத், பாலுார் ஆகிய நிறுத்தங்களில் இறங்கிக்கொள்ளலாம்.சமீபத்தில், புதுச்சேரி - திருப்பதி மின் விரைவு ரயிலில், குறைந்த கட்டணமாக, 30 ரூபாய் வசூலிக்கப்படுவது, சற்று கூடுதல் கட்டணம்.புதுச்சேரி - திருப்பதி ரயிலில், திருமால்பூர் ரயில் நிலையத்தில் இருந்து, திருப்பதி வரையில், 25 ரூபாய் கட்டணத்தில், எளிதாக சென்று வந்தோம். விரைவு ரயில் சேவை என்ற பெயரில், ரயில் கட்டணம் இரட்டிப்பாக வசூலிப்பது வேதனை அளிக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.ரயில்வே துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:டீசல் ரயிலில் இருந்து, மின் விரைவு ரயிலாக மாறிய பின், அதற்குரிய மிக குறைந்த கட்டணமாக, 30 ரூபாயில் இருந்து துவங்குகிறது.அதற்கு ஏற்ப, சில ரயில் நிறுத்தங்களில் நிறுத்துவதை தவிர்த்து, விரைவாக செல்வதற்கு வசதி செய்து தரப்பட்டு உள்ளது. இது, விரைவாக செல்லும் ரயில் பயணியருக்கு சவுகரியமாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.கழிப்பறை வசதி இல்லைபுதுச்சேரி - திருப்பதி டீசல் ரயிலில், கழிப்பறை வசதி இருந்தது. குந்தைகள், முதியவர், சர்க்கரை நோயாளிகள் மற்றும் பல தரப்பினருக்கு பயனுள்ளதாக இருந்தது. சமீபத்தில் துவங்கிய புதுச்சேரி - திருப்பதி மின்சார விரைவு ரயிலில், கழிப்பறை வசதி இல்லை. இதனால், நீண்ட துாரம் பயணம் செய்யும் ரயில் பயணியர் அவதிப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.