கஞ்சா வழக்கில் சிக்கவைத்ததால் மனைவியை கொலை செய்தோம்: கள்ளக்காதலியுடன் கைதான கணவன் வாக்குமூலம்
ஸ்ரீபெரும்புதூர்: கள்ளக்காதலியை கஞ்சா வழக்கில் போலீசில் சிக்கவைத்ததால் மனைவியின் கழுத்தை நெரித்து கொன்றோம் என கைதான கணவன் வாக்குமூலம் அளித்துள்ளார். கள்ளகாதலியும் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீபெரும்புதூர் அருகே போந்தூர்-தெரேசாபுரம் செல்லும் சாலை அருகே காலி மனையில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடந்த 18ம் தேதி சடலமாக கிடந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த பெண்ணின் ஆடை கிழிந்து இருந்ததால் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இவர் எதற்காக இங்கு வந்தார்? பாலியல் பலாத்காரத்தில் கொலை செய்து வீசிவிட்டு சென்றார்களா? விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். தீவிர விசாரணையில், வடமாநில பெண் என்பதும் ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பகுதியில் வசித்து வந்த நவீனின் மனைவி பிரியா (25) என்பதும் தெரியவந்தது. மேலும் காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் நவீனும், பிரியாவும் காதலித்து கடந்த 3 ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து நேற்று நவீனை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர் மனைவி பிரியாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

மேலும் இவர்களுக்கு பிறந்த பெண் குழந்தை ஒரு சில மாதங்களில் இறந்துவிட்டதும் தெரியவந்தது. இதனிடையே, நவீனுக்கும், காஞ்சிபுரத்தை சேர்ந்த கல்பனா என்ற கஞ்சா வியாபாரிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பிரியா பிரிந்து சென்றுள்ளார். ஆதரவின்றி வாழ்ந்த பிரியாவுக்கு காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவருடன் நெருக்கம் ஏற்பட்டு உல்லாசமாக இருந்து வந்துள்ளார். மேலும், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஜோதி என்பவருடன் சேர்ந்து பாலியல் தொழிலிலும் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் தன்னை பிரிந்து சென்ற கணவன் நவீனை பழிவாங்கும் நோக்கில் பொதுஇடங்களில் அவரை பார்க்கும்போதெல்லாம் அவமானப்படுத்தி பேசி வந்துள்ளார். இதுதவிர கல்பனா, அவரது தம்பி காளிதாஸ் ஆகியோர் காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்பது குறித்து போலீசாருக்கு பிரியா தகவல் தெரிவித்துள்ளார். இதனால் கல்பனா, காளிதாஸ் ஆகியோரை கடந்த சிலமாதங்களுக்கு முன்பு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பிறகு இருவரும் ஜாமீனில் வெளியில் வந்துள்ளனர்.

இதனால் பிரியா மீது கல்பனா கடும் கோபத்துடன் இருந்துள்ளார். அவரை பழிவாங்க துடித்துள்ளார். இந்நிலையில் நவீனுடன் சேர்ந்து பிரியாவை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி, நவீனை உன்னுடன் சேர்த்து வைக்கிறேன் என கூறி பிரியாவை காஞ்சிபுரத்தில் உள்ள ஓட்டலுக்கு கல்பனா வரவழைத்துள்ளார். பிரியா ஓட்டலுக்கு வந்ததும் 3 பேரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அதன்பிறகு நவீனும் கல்பனாவும் சேர்ந்து பிரியாவை சரமாரி அடித்து உதைத்தும் கழுத்தை நெரித்தும் கொலை செய்துள்ளனர். பின்னர், சடலத்தை இரவோடு இரவாக தெரேசாபுரம் பகுதியில் வீசிவிட்டு சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தகவலை நவீன் வாக்குமூலமாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து கைது செய்யப்பட்ட நவீன், கல்பனாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.