Imran khan has become the first PM in the history of Pak to be removed from power

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அரசியல் வரலாற்றில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் பதவியிலிருந்து நீக்கப்பட்ட முதல் பிரதமர் இம்ரான் கான் ஆவார்.

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி, பண வீக்கம் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டன. இதற்கு இம்ரான் கானின் தவறான கொள்கைகளும் நிர்வாகத் திறமையின்மையும்தான் காரணம் என சொல்லப்பட்டது.

இதையடுத்து பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கானுக்கு கொடுத்த வாபஸை கூட்டணி கட்சிகள் திரும்ப பெற்றன. இதையடுத்து அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

வாக்கெடுப்பு


இந்த தீர்மானத்தின் மீது கடந்த வாரம் வாக்கெடுப்பு என அறிவிக்கப்பட்ட நிலையில் நாடாளுமன்றத்தை கலைக்க இம்ரான் கான் ஆளுநருக்கு பரிந்துரை செய்திருந்தார். அதன்படி ஆளுநரும் நாடாளுமன்றத்தை கலைத்தார். விரைவில் 6 மாதங்களுக்குள் மீண்டும் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

பாகிஸ்தான் நாடாளுமன்றம்


இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் நாடாளுமன்றம் தானாக முன் வந்து விசாரணை நடத்தியது. அப்போது பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை இம்ரான் கான் கலைத்தது செல்லாது என்றும் பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக இம்ரான் கானை நியமனமும் செல்லாது என அறிவிக்கப்பட்டது. மேலும் ஏப்ரல் 9ஆம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த வேணடும் என உத்தரவிடப்பட்டது.

இம்ரான் கான்


இம்ரான் கானுக்கு இந்த உத்தரவு பேரிடியாக விழுந்தது. இதையடுத்து நேற்றைய தினம் பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடியது. அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மட்டுமே வந்திருந்தனர். ஆளும் கட்சியினரை காணவில்லை. இம்ரான் கானும் நாடாளுமன்றத்திற்கு வரவில்லை.

இம்ரான் கான் அரசு


இதையடுத்து பாகிஸ்தான் நாடாளுமன்றம் நேற்று பிற்பகல் வரை ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் நள்ளிரவு 1.30 மணிக்கு பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடியது. அப்போது இம்ரான் கான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

172 எம்பிக்கள் ஆதரவு தேவை


இந்த வாக்கெடுப்பில் வெல்ல 172 எம்பிக்களின் ஆதரவு இம்ரானுக்கு தேவை. ஆனால் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக 174 எம்பிக்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். இதனால் இம்ரான் கானின் ஆட்சி கவிழ்ந்தது. இந்த நிலையில் பாகிஸ்தானின் அடுத்த பிரதமர் உடனடியாக இன்றோ அல்லது நாளையோ தேர்வு செய்யப்படுவார் என தெரிகிறது.

முதல் பிரதமர் இம்ரான் கான்


எதிர்க்கட்சித் தலைவரான ஷெபாஸ் ஷெரீப் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இம்ரானின் பதவிக்காலம் ஆகஸ்ட் 2023 ஆம் ஆண்டு முடிவடைகிறது ஆனால் அதற்கு அவர் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டார். பாகிஸ்தான் வரலாற்றில் இதுவரை ஒரு பிரதமர் கூட தங்களது பதவிக்காலத்தை முழுமையாக முடித்தது இல்லை. அது போல் பாகிஸ்தான் வரலாற்றில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்ட முதல் பிரதமர் இம்ரான்கான்.