ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிளாஸ்டிக் சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட இருப்பதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

Plastic road construction work will start soon in Ranipettai says collector Baskara Pandian


ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிளாஸ்டிக் சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட இருப்பதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளின் நிலவரங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் அவர் பேசியதாவது:-


குடிசை வீடுகள் கணக்கெடுப்பு


கலைஞரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் விடுபட்டு உள்ள குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணிகள் வருகிற 4.4.22-ந் தேதி முதல் 25.4.22-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் விடுபட்டுள்ள குடிசை வீடுகள், வீடு இல்லாதவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து இத்திட்டத்தில் வீடில்லா ஏழை மக்களுக்கு வீடு கட்டித்தரும் பணியினை விரைவாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 25 ஊராட்சிகளில் 43 குக்கிராமங்கள் இந்த நிதியாண்டில் தேர்வு செய்யப்பட உள்ளது. அதேபோன்று 2022-23-ம் நிதியாண்டில் 57 கிராம ஊராட்சிகளில் 265 குக்கிராமங்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. ஆரம்ப நிதி ரூ.30 லட்சம் முதல் ரூ.2 கோடியே 50 லட்சம் வரை இந்த கிராம பகுதிகளில் வளர்ச்சித் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. நடப்பு ஆண்டில் ஒதுக்கப்பட்டுள்ள கிராம ஊராட்சிகளின் திட்ட அறிக்கைகளை அடுத்த ஒரு வாரத்திற்குள் முடித்துவிட வேண்டும்.

பிளாஸ்டிக் சாலை


அதேபோன்று பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில் 4,452 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு 3,864 நபர்களுக்கு வீடு கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறை கட்டித்தரும் திட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்னும் 4 ஆயிரம் குடியிருப்பு வாசிகளுக்கு கழிப்பறைகள் அமைக்கப்பட வேண்டியுள்ளது. இவைகளை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனி கவனம் செலுத்தி ஒரு மாதத்திற்குள் விரைவாக முடிக்க வேண்டும்.

மொத்தமுள்ள 7 ஊராட்சி ஒன்றியத்தில் தலா 2 ஊராட்சிகள் வீதம் 14 ஊராட்சிகள் சிறந்த ஊராட்சிகளாக தேர்வு செய்யப்பட்டு, முன்மாதிரி கிராமம் என்ற அந்தஸ்தை வழங்கிட அனைத்து பணிகளும் செய்து முடிக்கப்பட வேண்டும்.

கிராம ஊராட்சிகளில் குடியிருப்புகளில் இருந்து சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களை அரைத்து சாலை அமைக்கும் பணிக்காக வாலாஜா ஒன்றியம்‌ தென்கடப்பந்தாங்கல் ஊராட்சி, சோளிங்கர் ஒன்றியத்திலும் பிளாஸ்டிக் அரவை எந்திரம் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்டுள்ளது. இந்த எந்திரங்களை தார்சாலை அமைக்கும் போது பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவை மகளிர் சுய உதவிக் குழுக்களால் பராமரிக்கப்படும். குடியிருப்புகளில் இருந்து ஒரு கிலோ பிளாஸ்டிக் ரூ.10-க்கு பெறப்பட்டு அரவை இயந்திரங்கள் மூலமாக பயன்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.


கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, செயற்பொறியாளர் சீனிவாசன் மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.