சோளிங்கரில் கடந்த 2018-ம் ஆண்டு அரசு பஸ்சின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதாக 3 வாலிபர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் இருந்து அரக்கோணத்துக்கு கடந்த 2018-ம் ஆண்டு மே 29-ந்தேதி மாலை அரசு பஸ் இயக்கப்பட்டது.
பஸ்சின் டிரைவராக திருத்தணியை சேர்ந்த சண்முகம் என்பவரும், சோளிங்கரை சேர்ந்த சக்திவேல் கண்டக்டராகவும் இருந்தனர்.
இந்த பஸ் பாராஞ்சி மயானம் அருகே சென்றபோது பைக்கில் வந்த 3 பேர், தங்கள் கையில் வைத்திருந்த கல்லை வீசினர். இதில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி நொறுங்கியது.
இதுகுறித்து சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் கண்டக்டர் சக்திவேல் அளித்த புகாரின் பேரில் அரக்கோணத்தை சேர்ந்த சண்முகம் (25), ராகுல் (25), வெங்கடேசன் (25) ஆகியோரை கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை வேலூர் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி வசந்தலீலா முன்னிலையில் நடைபெற்றது.
இதில் தீர்ப்பளித்த நீதிபதி, பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய குற்றத்திற்காக 3 பேருக்கும் தலா ஓராண்டு சிறையும், தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.
இதையடுத்து 3 பேரையும் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைத்தனர்.